Pages

Thursday, April 26, 2012

இதயத்திற்கு இதம் தரும் சாக்லேட்


சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட்டை விரும்பாதவர்கள் இல்லை. அந்த சாக்லேட் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. இந்த இனிப்பான ஆய்வு முடிவினை வெளியிட்டவர்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்தான்.

தினசரி சிறிதளவு சாக்லேட் சாப்பிடுவதால் இதய நோய், பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவதாக கடந்த சில ஆண்டுகளாக நடந்த 7 ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டது. சாக்லேட்டுகளில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன.
சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் உயர்ரத்த அழுத்தம் குறைகிறது. இன்சுலின் சுரப்பு சரியாகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றை ஒருங்கிணைத்து 8வது ஆய்வை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்தினர்.

இதயநோய் பாதித்த, பாதிக்காத ஒரு லட்சம் பேர் பங்கேற்ற இந்த ஆய்வில் ஒரு பிரிவினருக்கு சாக்லேட் அளிக்கப்படவில்லை. மற்றொரு பிரிவுக்கு அதிகளவில் சாக்லேட் அளிக்கப்பட்டு வந்தது. தினசரி ஒன்று என்ற அளவில் சாக்லேட் பார் சாப்பிட்டு வந்தவர்களுக்கு மற்றவர்களைவிட இதய நோய் ஆபத்து 37 சதவீதம் குறைவாக இருந்தது சோதனையில் தெரிய வந்தது. 29 சதவீதம் பக்கவாத அபாயம் நீங்கியது. எனினும், மாரடைப்பை தடுப்பதில் சாக்லேட்டுக்கு பங்கில்லை என்று தெரிந்தது.

முதல்கட்ட 6 ஆய்வுகளில் சாக்லேட்டுக்கும் இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கும் தொடர்பு இருப்பது நிரூபணமானது. பார், சாக்லேட் டிரிங்க், பிஸ்கெட், டெசர்ட் என பால் அதிகமுள்ள சாக்லேட், சாக்கோ அதிமுள்ள சாக்லேட் (டார்க் சாக்லேட்) என எதுவாக இருந்தாலும் பெரிய வித்தியாசம் ஏதும் தெரியவில்லை. எனினும், சாக்லேட் சாப்பிடுவதில் எச்சரிக்கை தேவை என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஏனெனில், கடைகளில் விற்கப்படும் சாக்லேட்களில் 100 கிராமுக்கு 500 கலோரிகள் உள்ளன. அதை அதிகளவு சாப்பிடுவதால் உடல் எடை கூடவும், டயபடீஸ் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, கலோரி குறைந்த தரமான சாக்லேட்களில் இருக்கும் பொருட்களே ரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்தி இதய நோயை தடுக்க உதவும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இதனால்தானோ காதலர்கள் தங்களின் மனம் கவர்ந்தவர்களின் இதயத்தை பாதுகாக்க சாக்லேட்டை பரிசாக அளிக்கின்றனரோ என்னவோ? நீங்களும் தினசரி ஒரு சாக்லேட் சாப்பிடுங்களேன். இதயம் பலமாகும்.

No comments:

Post a Comment